கத்தை, கத்தையாக ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கியது; பெண்கள் உள்பட 7 பேர் கைது


கத்தை, கத்தையாக ரூ.38 லட்சம்  கள்ள நோட்டுகள் சிக்கியது; பெண்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில், கத்தை கத்தையாக ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கியது. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில், கத்தை கத்தையாக ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கியது. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியில் நேற்று அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 2 கார்கள் வேகமாக வந்தன. அந்த கார்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

கத்தை கத்தையாக...

அப்போது காருக்குள் இருந்த பைகளில் ரூபாய் நோட்டுகள் போன்று கத்தை, கத்தையாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் அவற்றை பரிசோதித்தபோது, அவை அனைத்தும் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஈரோட்டில் இருந்து கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவிலுக்கு அவற்றை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

7 பேர் கைது

இதையடுத்து கார்களில் இருந்த ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.2 லட்சம் ரொக்கம், 2 கார்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (வயது 49), சந்தோஷ் (32), சிராஜ்கரிம் (44), வீரபத்ரன் (34), ஜெகதீஸ் (38), ஈரோட்டைச் சேர்ந்த வளர்மதி (42), கிருஷ்ணவேணி (23) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார்களில் கடத்தி வரப்பட்ட ரூ.38 லட்சம் கள்ளநோட்டுகள் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story