திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ரூ.4½ கோடி மோசடி


திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ரூ.4½ கோடி மோசடி
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ரூ.4½ கோடி மோசடி செய்த கணினி பெண் ஆபரேட்டர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர்;

திட்டக்குடி அருகே உள்ள எறையூரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி பத்மினி. பெண்ணாடத்தை சேர்ந்த மணி மனைவி தேவகி. இவர்கள் 2 பேரும் தங்களது கணவர் இறந்து விட்டதால் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரணத்திற்கு நிவாரணத்தொகை கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், 6 மாதங்களுக்கு மேல் மனு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேபோல் விபத்து காப்பீடு திட்டம், திருமண உதவித்தொகை கேட்டு மனு கொடுத்து பல மாதங்கள் ஆகியும், தங்களுக்கு நிதி கிடைக்கவில்லை என்று திட்டக்குடி பகுதியில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான புகார்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது.

விவரங்கள் ஆய்வு

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகத்தில் மட்டும் மனு கொடுத்த நூற்றுக்கணக்கானோருக்கு நிதி கிடைக்கவில்லை என்று புகார் வந்ததால் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து களத்தில் இறங்கிய அவர், திட்டக்குடி தாலுகா அலுவலகம் மீது புகார் வந்த மனுக்களை சேகரித்தார். பின்னர் அவர் திட்டக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தி, இணைய தள விவரங்களை ஆய்வு செய்தார்.

கோட்டாட்சியர் அதிர்ச்சி

ஆய்வில், இயற்கை மரணத்திற்கு நிவாரணத்தொகை, விபத்து காப்பீடு திட்டம், திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த நிதி சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.

மாறாக பயனாளிகள் அல்லாத வேறு நபர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தி இருப்பது தெரிந்தது. இவ்வாறாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோட்டாட்சியர், தனது விசாரணையை அறிக்கையாக தயார் செய்து கலெக்டரிடம் வழங்கினார்.

ரூ.4½ கோடி மோசடி

கலெக்டர் உத்தரவின் பேரில் கடலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரமா, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் புகார் அளித்தார்.

அதில், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4½ கோடி மோசடியில் ஈடுபட்ட திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட கணினி ஆபரேட்டர் அகிலா (வயது 30) உள்பட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த புகார் மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் விசாரித்தனர்.

9 பேர் மீது வழக்கு

இதையடுத்து கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்த திட்டக்குடியை சேர்ந்த வினோத்குமார் மனைவி அகிலா (வயது 30), அவரது கணவர் வினோத்குமார் (30), அகிலாவின் தங்கை கணவர் சாந்தப்பன் மகன் பாலகிருஷ்ணன் (30), பெரியப்பா மணிவண்ணன் (58), தாய் விஜயா (48), செல்வராஜ், வளர்மதி, முத்துசாமி, விஜயன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் அகிலா, வினோத்குமார், பாலகிருஷ்ணன், மணிவண்ணன், விஜயா ஆகிய 5 பேரை பிடித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

விசாரணையில், கணினி ஆபரேட்டர் அகிலா, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிதி கேட்டு விண்ணப்பித்த 1200-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தாமல், தனது கணவர் வினோத்குமார் உள்பட 8 பேரின் பல்வேறு வங்கி கணக்குகளில் 4 கோடியே 62 லட்சத்து ஆயிரத்து 781 ரூபாயை செலுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

உறவினர்களின் பெயர்களில் மோசடியாக பண பரிமாற்றம் செய்து அரசு பணத்தை அபகரித்து கையாடல் செய்து, தெரிந்தே அரசுக்கு இழப்பீடு செய்தது தெரிந்தது. இதையடுத்து பிடிபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட அகிலா 8 மாத கர்ப்பிணி என்பதால் அவரை போலீசார், ஜாமீனில் விடுவித்தனர். மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகாரிகளுக்கும் தொடர்பா?

மோசடி செய்து பெற்ற பணத்தில் அகிலா குடும்பத்தினர் கார், நகை, சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். முதற்கட்டமாக அவர்களிடம் இருந்து 2 கார், 1 சரக்கு வாகனம், 5½ பவுன் நகை, ரூ.68 ஆயிரத்து 500 ரொக்கம், 4 சொத்து பத்திரங்களின் நகல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு சாதாரண கணினி ஆபரேட்டரால் ரூ.4½ கோடி மோசடி செய்ய வாய்ப்பில்லை என்றும், இதில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story