நிதி நிறுவனம் நடத்தி ரூ.4½ லட்சம் மோசடி: கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


நிதி நிறுவனம் நடத்தி ரூ.4½ லட்சம் மோசடி: கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4½ லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

தீக்குளிக்க முயற்சி

சேலம் இரும்பாலை மோகன்நகர் கீரைபாப்பம்பாடி புதூரை சேர்ந்தவர் வைரவேல் (வயது 29). இவர், நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் ஓடிவந்து வைரவேலை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் வைரவேலின் கையில் வைத்திருந்த தீப்பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று வைரவேலை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ரூ.4½ லட்சம் மோசடி

அதில், சேலம் 4 ரோடு பகுதியில் தனியார் மருந்து கம்பெனியில் வேலை செய்தபோது, அந்த நிறுவனத்தின் ஆடிட்டருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் நிதி நிறுவனம் நடத்தி வந்ததால் அவரிடம் ரூ.6 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் தான் திருப்பி கொடுத்தார். மீதி ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கேட்டபோது, அவரின் நண்பர் ஒருவர் சீட்டு நடத்தி வருவதாகவும், அவரிடம் சீட்டு போட்டு கழித்துக்கொள்ளுமாறு கூறினார்.

இதனால் ஆடிட்டரின் நண்பரிடம் சீட்டு போட்டதில் நான் ஏமாற்றிவிட்டதாக அவர் இரும்பாலை போலீசில் புகார் செய்துவிட்டார். அதன்பேரில் போலீசார் என்னை விசாரணைக்கு அழைத்தனர். எனவே, பண மோசடி செய்து ஏமாற்றிய ஆடிட்டர் மற்றும் அவரின் நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வந்தேன் என்று தெரிவித்தார். மேலும், தீக்குளிக்க முயன்ற வைரவேல், ஒரு தாளில் மரண வாக்குமூலத்தையும் எழுதி வைத்திருந்தார். இதனால் அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story