விழுப்புரத்தில் பஸ் டிரைவர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை- பணம் கொள்ளை
விழுப்புரத்தில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
விழுப்புரம் வழுதரெட்டி சபரி நகரில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் (வயது 58). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதியன்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊரான விக்கிரவாண்டி தாலுகா வாக்கூர் பகண்டையில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றார்.அங்கு கும்பாபிஷேக விழாவை முடித்துக்கொண்டு ஜெயச்சந்திரன் குடும்பத்தினர், வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
நகை- பணம் கொள்ளை
உடனே அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்- இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
ராணுவ வீரர் வீட்டில் திருட முயற்சி
இதேபோல் விழுப்புரம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் ஊட்டியில் இருந்து வருகிற நிலையில் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு நகை- பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.