அரசு மருத்துவமனை லேப் டெக்னீசியன் வீட்டில் ரூ.4½ லட்சம் நகை கொள்ளை
விழுப்புரத்தில் அரசு மருத்துவமனை லேப் டெக்னீசியன் வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 53). இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பார்வதி கடலூரில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பார்வதி, வேலைக்கு சென்று விட்டார். அவர்களது மகள் கல்லூரிக்கும், மகன் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். அதன் பிறகு பரமேஸ்வரன், காலை 9 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் 2.30 மணியளவில் அவர் வீட்டிற்கு வந்தார்.
நகைகள் கொள்ளை
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த மர அலமாரி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வீட்டில் உள்ள 4 பேரும் வெளியில் சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பட்டப்பகலிலேயே பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.4½ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.