அரசு செட்டாப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் ரூ.41 லட்சம் மோசடி


அரசு செட்டாப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் ரூ.41 லட்சம் மோசடி
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு செட்டாப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் ரூ.41 லட்சம் மோசடி செய்த 14 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு செட்டாப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் ரூ.41 லட்சம் மோசடி செய்த 14 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தனி தாசில்தார் ரமேஷ்குமார் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச செட்டாப்பாக்ஸ்களை வழங்கி மிகக்குறைந்த மாத சந்தா கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உரிமம் பெற்ற கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய தாலுகாவில் உள்ள 14 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடம் இருந்து கடந்த 20-9-2017 முதல் கடந்த மாதம் வரை ரூ.1725.25 மதிப்புள்ள செட்டாப்பாக்ஸ்க்கு ரூ.180 வீதம் வைப்பு தொகை செலுத்தி ரூ.41 லட்சத்து 6 ஆயிரத்து 95 மதிப்புள்ள 2380 அரசு செட்டாப்பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பெற்று கொண்டனர்.

ஆனால் அவர்கள் அரசு செட்டாப்பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல் அதற்கு பதிலாக தனியார் நிறுவன செட்டாப்பாக்ஸ்களை வழங்கியுள்ளனர்.

வழக்குப்பதிவு

மேலும் அரசு செட்டாப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை ஏமாற்றி மோசடி செய்து தனியார் நிறுவன செட்டாப்பாக்ஸ்களை பயன்படுத்த செய்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு பெருத்த வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவன சேவையை வழங்காமல் தடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் போில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ள 14 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story