நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரூ.50 லட்சம் தங்கம் சிக்கியது; 4 பேர் கைது


நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரூ.50 லட்சம் தங்கம் சிக்கியது; 4 பேர் கைது
x

துபாயில் இருந்து ஆசன வாயில் மறைத்து கடத்தி வந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் நாங்குநேரி சுங்கச்சாவடி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் திருச்சி புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல் ஜாபர் மகன் அலாவுதீன் (வயது 39) உள்பட 4 பேர் இருந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து காரில் புதுக்கோட்டை செல்வதாக தெரிவித்தனர். ஆனால், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அலாவுதீன் துபாயில் இருந்து தனது ஆசன வாய் பகுதியில் 4 சிறிய ரப்பர் பைகளுக்குள் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கடத்தி வந்த தங்கம் மற்றும் பாஸ்போர்ட், காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அலாவுதீன், அவருடன் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரபுத்திரன் (40), செந்தில்குமார் (36), பிரவீன் சார்லஸ் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சுங்கத்துறை அதிகாரிகளிடம் தங்கமும் ஒப்படைக்கப்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையின் கடுமையான பாதுகாப்புகளையும் மீறி தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் நாங்குநேரியில் பிடிபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story