நிதி நிறுவனத்தில் ரூ.51 லட்சம் மோசடி; 8 ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 51 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிவகங்கை
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 51 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நிதி நிறுவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒரு தனியார்நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய உள்ள காலத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் அந்த நிறுவனத்தில் ஏற்கனவே கடன் பெற்ற 723 பேர் கொடுத்திருந்த ஆவண நகல்களை பயன்படுத்தி அவர்களுக்கு தெரியாமல் கல்விக்கடன் மற்றும் அவசர கடன் முதலிய கடன்களை எடுத்துள்ளார்கள்.
இதன்மூலம் அவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து ரூ.51 லட்சத்து 55 ஆயிரத்து, 260-ஐ மோசடி செய்தார்களாம்.
வழக்கு
இதுதொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் மண்டல மேலாளர் அருண்ராஜ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி முத்துகிருஷ்ணன்(வயது 37), செல்வமணி (36), கல்யாண சுந்தரம் (37), கருப்புசாமி(34), மது பிரகாஷ்(30), மாரிபாண்டி (38), சையது அலி(36), விக்னேஷ்(28) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.