சிறுசேமிப்பு திட்டம் நடத்தி ரூ.56 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
சேலத்தில் சிறுசேமிப்பு திட்டம் நடத்தி ரூ.56 கோடி மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் சேலம், நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:-
சேலத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 87 கிளைகளுடன் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களிடம் தினசரி, வாரம், மாதந்தோறும் பணம் வசூலித்து வந்தனர். இதில் சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து பணம் செலுத்தினர். ஆனால் முதிர்வு காலம் முடிந்தும் பலருக்கு அந்த நிறுவனம் பணம் வழங்கவில்லை.
ரூ.56 கோடி மோசடி
இதன்மூலம் அந்த நிறுவனம் சுமார் ரூ.56 கோடி வரை மோசடி செய்துள்ளது. தற்போது சேலத்தில் செயல்பட்ட தலைமை நிறுவனம் மூடப்பட்டுள்ளது. எனவே இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் இதுதொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
ரோட்டை காணவில்லை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கைகளில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதில் சாமிநாதபுரம் பகுதியில் ரோட்டை காணவில்லை, 100 அடி நீளம், 20 அடி அகலம் இருக்கும், மீட்டு தாருங்கள் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.