ஆசிரிய தம்பதி வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை


ஆசிரிய தம்பதி வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:47 PM GMT)

திருக்கோவிலூரில் பட்டப்பகலில் ஆசிரிய தம்பதி வீட்டில் புகுந்து ரூ.6 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

ஆசிரிய தம்பதி

திருக்கோவிலூரை அடுத்த சந்தப்பேட்டை உண்ணாமலையார் நகரில் வசித்து வருபவர் கண்ணாயிரம் மகன் சுரேஷ்குமார்(வயது 35). திருக்கோவிலூர் அருகே உள்ள தேவியகரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நித்யா(35) கச்சிக்குச்சான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனா்.

நகைகள் கொள்ளை

பின்னர் சுரேஷ்குமார் சொந்த வேலை விஷயமாக மதியம் சுமார் 2 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டுகள் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணை

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் ஆசிரிய தம்பதி வீட்டில் புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story