சேலம் அருகே பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதான 2 பேரிடம் ரூ.6 லட்சம் மீட்பு-கார் பறிமுதல்


சேலம் அருகே பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதான 2 பேரிடம் ரூ.6 லட்சம் மீட்பு-கார் பறிமுதல்
x

சேலம் அருகே பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதான 2 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்தை போலீசார் மீட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

கொண்டலாம்பட்டி:

ரியல் எஸ்டேட் அதிபர்

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சக்திவேல், சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த பிரபு, சண்முகம் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சக்திவேல் உள்பட 3 பேரும் செல்வராஜிடம், தங்களிடம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் உள்ளதாகவும், இதனால் ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.12 லட்சமாக தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினர்.

இதை உண்மை என நம்பிய செல்வராஜ் கடந்த மாதம் ரூ.10 லட்சத்துடன் சேலம் அரியானூர் பகுதிக்கு காரில் வந்தார். அப்போது அங்கு ஏற்கனவே காரில் வந்து காத்திருந்த சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் செல்வராஜிடம் இருந்து பணத்தை பெற்றனர். பின்னர் அவருக்கு சூட்கேஸ் ஒன்றை கொடுத்து, இதில் ரூ.12 லட்சம் இருப்பதாக கூறிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

பணம் மீட்பு, கார் பறிமுதல்

பின்னர் செல்வராஜ் அந்த சூட்கேசை திறந்து பார்த்த போது மேல்பகுதியில் மட்டும் ரூ.500 இருந்தது. மற்ற அனைத்தும் வெள்ளை தாள்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மோசடி குறித்து செல்வராஜ் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக சண்முகம், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம், கார் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் வேறு யாரிடமாவது இதுபோன்ற பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story