ரூ.600 கோடி டைடல் பார்க் பூங்காவை விரைவில் அமைக்க வேண்டும் - கோ.தளபதி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


ரூ.600 கோடி டைடல் பார்க் பூங்காவை விரைவில் அமைக்க வேண்டும் - கோ.தளபதி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x

ரூ.600 கோடியில் டைடல் பார்க் பூங்காவை விரைவில் அமைக்க வேண்டும் என்று கோ.தளபதி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

மதுரை


ரூ.600 கோடியில் டைடல் பார்க் பூங்காவை விரைவில் அமைக்க வேண்டும் என்று கோ.தளபதி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மதுரையில் அவர் கூறியதாவது:-

வண்டியூர் கண்மாய்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சட்டசபையில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன். கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதுரையில் ரூ.114 கோடி செலவில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் 7 தளங்களுடன் அறிவியல் அதிசயமாக விளக்குகிறது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ரூ.166 கோடி செலவில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும். ரூ.100 கோடி செலவில் வண்டியூர் கண்மாய் கரை அழகுப்படுத்தப்படும் என்று நகராட்சி துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். தற்போது இந்த கண்மாய் சீரமைப்புக்கு ரூ.50 கோடி தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

திருப்பரங்குன்றத்தில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள், கடந்த 20 ஆண்டுகளாக 38 ஏக்கர் நிலத்தில் வசித்து வருகிறார்கள். ஆனால் அந்த நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என கூறி, அந்த நிலத்திற்கு பத்திரப்பதிவுக்கு தடைபோடப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகை கரையின் இருபுறமும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் சாலைகள் விடுப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் சாலைகள் அமைத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்போகும் இடத்தில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு ஒரு சாலை அமைக்க வேண்டும். மதுரையில் விடுப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்க ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணியினை தொடங்க வேண்டும்.

விமான நிலையத்தின் ஓடுதளம் 7,500 அடியில் இருந்து 12,500 அடியாக உயர்த்தப்படுகிறது. அதற்காக ரிங்ரோட்டில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது சுரங்க பாதைக்கு பதிலாக 8 கிலோ மீட்டர் சுற்றி வருவதற்கு ரூ.40 கோடி செலவில் சாலை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சுரங்க பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story