கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக ரூ.6.67 லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக ரூ.6.67 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக ரூ.6.67 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உதிரி பாகங்கள்
நித்திரவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது30). இவர் ஆன்லைன் நிறுவனம் மூலம் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் (21) என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது உதிரி பாகங்களுக்கு ரூ.14 லட்சம் கொடுக்க வேண்டும் என்று புவனேஷ் கூறியுள்ளார். அதன்படி ஆனந்த் ரூ.14 லட்சத்து 7 ஆயிரம் பணத்தை பல தவணைகளாக அவரது வங்கி கணக்குக்கு அனுப்பினார்.
ஆனால் ஆனந்த் அளித்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை புவனேஷ் அனுப்பாமல் குறைவான பொருட்களே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேட்டபோது ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்தை புவனேஷ் திரும்பி கொடுத்துவிட்டார். ஆனால் மீதமுள்ள ரூ.6 லட்சத்து 67 ஆயிரம் பணத்தை கொடுக்கவில்லை.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் இதுபற்றி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசுக்கு, சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்திடம் பணத்தை மோசடி செய்த புவனேஷ் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து புவனேசை கைது செய்தனர்.