திருப்பரங்குன்றத்தில் ரூ.7 லட்சம் மோசடி புகார்; மின்வாரிய அதிகாரி கைது -அரசு பள்ளி ஆசிரியைக்கு வலைவீச்சு
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது மனைவியான அரசு பள்ளி ஆசிரியை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
திருப்பரங்குன்றம்,
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது மனைவியான அரசு பள்ளி ஆசிரியை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
ரூ.7 லட்சம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் காவேரி முதல் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி சாந்தி (வயது 40).
மதுரை கூடல்நகர் சீனிவாசநகரை சேர்ந்தவர் உதயகுமார் (44). இவர், சிவகங்கை மாவட்டம் உறங்கான்பட்டி மின்சார வாரியத்தில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி (40). இவர் மதுரை ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தியிடம் அவரது மகனுக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக உதயகுமார் மற்றும் அவருடைய மனைவி சுமதி ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது. இதற்காக சாந்்தி ரூ.7 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மின்வாரிய அதிகாரி கைது
ஆனால், சாந்தியின் மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து உதயகுமாரிடம், தான் கொடுத்த ரூ.7 லட்சத்தை சாந்தி கேட்டார். அப்போது, போலியாக ஒரு பணி ஆவணத்தை வழங்கினாராம்.
இந்தநிலையில், உதயகுமாரிடம் தான் கொடுத்த ரூ.7 லட்சத்தை உடனே திருப்பி தரவேண்டும் என சாந்தி கூறினார். அப்போது, உதயகுமாரும், சுமதியும் சேர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயரிடம் சாந்தி புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில், திருநகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் உதயகுமார், சுமதி மீது வழக்குப்பதிவு செய்து, உதயகுமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிரியை சுமதியை போலீசார் தேடி வருகின்றனர்.