கோத்தகிரியில் ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை- தேயிலை வாரிய அதிகாரி தகவல்


கோத்தகிரியில் ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:  பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை- தேயிலை வாரிய அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

கோத்தகிரியில் நடந்த ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரிய அதிகாரி தெரிவித்தார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் நடந்த ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரிய அதிகாரி தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

கோத்தகிரி கேர்கம்பை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்திய தேயிலை வாரியத்தின் மூலம் தேயிலை மேம்பாட்டு மற்றும் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சிறு தேயிலை விவசாயிகளுக்கு மானிய பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் இந்திய தேயிலை வாரிய தலைவர் சவுரவ் பஹாரி, குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார், இந்திய தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ் சந்தர் தலைமையில் மானிய பொருட்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களை சேர்ந்த சுமார் 160 சிறு தேயிலை விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டைகள், தேயிலை அறுவடை எந்திரங்கள், களை எடுப்பான், கையால் இயக்கப்படும் தெளிப்பான்கள், பவர் ஸ்பிரேயர்கள், கவாத்து எந்திரங்கள் மற்றும் இலை போக்குவரத்து வாகனங்களுக்கு மானியமாக ரூபாய் 6.94 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பயிற்சி

அதிகாரிகள் பேசும் போது கூறியதாவது:- கடந்த 5 சகாப்தங்களாக தேயிலை வாரியம் நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு தோட்ட பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்ய பல்வேறு வகையான நிதி உதவிகள் வழங்கி வருகிறது. கடந்த வருடம் முதல் சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தையும் வாரியம் அறிவித்துள்ளது. இச்சிறப்பு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 778 பயணாளிகளுக்கு சுமார் 1.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. தேயிலை வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்துரைக்க கிராமங்கள் தோறும் பயிற்சி வகுப்புகள் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உரிய விலை கிடைக்க நடவடிக்கை

இந்திய தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ் சந்தர் கூறுகையில், தற்போது உள்ள சூழலில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கிடைத்து வரும் நிலையில் கூடிய விரைவில் உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.

முன்னதாக உதவி செயல் இயக்குனர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். முடிவில் உதவி செயல் இயக்குநர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story