தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி


வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார்கைதுசெய்தனர்.

தூத்துக்குடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வெளிநாட்டில் வேலை

சேலம் மாவட்டம் கணபதி பாளையத்தை சேர்ந்த முனியப்பன் மகன் ரமேஷ்குமார் (வயது 35). சேலம் மாவட்டம் மோகனகுமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மல்லிராஜா மகன் சதீஷ்குமார் (40) ஆகிய 2 பேரும் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து உள்ளனர். இதனை நம்பி தூத்துக்குடி பொன்சுப்பையா நகரை சேர்ந்த அருணாச்சலம் மகன் செல்வகுமார் (31) என்பவர் ரமேஷ்குமார், சதீஷ்குமார் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, அவர்கள் செல்வகுமாரை பிரான்ஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகவும், அதற்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் பணம் செலவாகும் என்றும் அதற்கு முன்பணமாக ரூ.70 ஆயிரம் செலுத்தினால் ஒரு மாதத்திற்குள் விசா வழங்கப்படும் என்றும், விசா வழங்கியவுடன் மீதமுள்ள தொகையை செலுத்தினால் போதும் என்று கூறி உள்ளனர். இதை நம்பிய செல்வக்குமார், ஆன்லைன் மூலம் ரமேஷ்குமாரின் வங்கி கணக்குக்கு ரூ.70 ஆயிரத்தை 2 தவணையாக அனுப்பி உள்ளார். அதனை பெற்றுக் கொண்டவர்கள் ஒரு மாதத்தில் விசா தருவதாக கூறி உள்ளனர்.

2 பேர் கைது

ஆனால் 2 மாதம் ஆகியும் விசா வராததால் செல்வக்குமார் சந்தேகம் அடைந்து, அவர்கள் 2 பேரையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது பணத்தை திருப்பி தருவதாக கூறி ஏமாற்றி உள்ளனர். இதனால் செல்வக்குமார் நேரில் சென்று கேட்ட போது, 2 பேரும் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இது குறித்து செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ஸ்டீபன் டேவிட் ஆகியோர் அடங்கிய போலீசார், மோசடி செய்ததாக ரமேஷ்குமார், சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story