27 பேரிடம் ரூ.78¾ லட்சம் மோசடி


27 பேரிடம் ரூ.78¾ லட்சம் மோசடி
x

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 27 பேரிடம் ரூ.78¾ லட்சம் மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கிய துணை கலெக்டர் உள்பட 4 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

போலீசில் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 39). இவரும், இட்டிக்கல் அகரம், தேவசமுத்திரம், நக்கல்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 26 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எங்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த யாரப்பாஷா, ஓசூர் சிட்கோ தாசில்தார் வெங்கடேசன், கிருஷ்ணகிரி கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்து தற்போது விழுப்புரம் துணை கலெக்டராக (ஆதி திராவிடர் நலப்பிரிவு) பணியாற்றி வரும் ரகுகுமார், ஓய்வு பெற்ற தாசில்தார் சண்முகம் ஆகியோர் கூறினார்கள்.

ரூ.78¾ லட்சம்

இவர்கள் அலுவலக உதவியாளர், சுகாதாரத்துறை பணியாளர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணி மற்றும் சுகாதாரத்துறையில் துப்புரவு பணியாளர், நெடுஞ்சாலை துறை மேற்பார்வையாளர், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் உதவியாளர் பணியிடங்கள், சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் வாங்கி தருவதாக கூறினார்கள். அதை நம்பி நாங்களும் பணம் கொடுத்தோம். ஒருவரிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரையில் மொத்தம் ரூ.78 லட்சத்து 74 ஆயிரம் அவர்கள் வாங்கினார்கள்.

போலி ஆணை

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் பணம் பெற்ற அவர்கள் எங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். பின்னர் தான் அது போலி பணி நியமன ஆணை என தெரியவந்தது. எங்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் புகார் கூறப்பட்ட யாரப் பாஷா, வெங்கடேசன், ரகுகுமார், சண்முகம் ஆகிய 4 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story