விருத்தாசலம் சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு- லஞ்ச பணத்தில் 10 வீட்டு மனைகள் வாங்கியது அம்பலம்


விருத்தாசலம் சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு- லஞ்ச பணத்தில் 10 வீட்டு மனைகள் வாங்கியது அம்பலம்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சார் பதிவாளர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடலூர்

விருத்தாசலத்தில் இயங்கி வரும் 1-ம் இணை பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தை சேர்ந்த சங்கீதா (வயது 35) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சிவக்குமார். இவர் உளுந்தூர்பேட்டை ஆதனூர் சிப்காட்டில் உள்ள ஒரு கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

பத்திரப்பதிவு செய்வதற்காகவும், ஆவணங்கள் பதிவு செய்வதற்காகவும், இதர பதிவுகளுக்காகவும் சார்பதிவாளர் சங்கீதாவை ஆவண எழுத்தர்கள் சந்தித்து லஞ்சம் கொடுக்கப்போவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் இணை சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர்.

ரூ.8¼ லட்சம் பறிமுதல்

அப்போது பத்திரப்பதிவுக்காக பொதுமக்களிடம் லஞ்சமாக புரோக்கர்கள் மூலம் சார் பதிவாளர் சங்கீதா பெற்றபணம் மற்றும் ஜி-பே, போன்-பே வழியாக பெற்ற ரூ.8 லட்சத்து 10 ஆயிரம், ஆவண எழுத்தர்கள் பாலதண்டாயுதம், கந்தசாமி ஆகியோர் சார் பதிவாளருக்கு கொடுக்க வைத்திருந்த லஞ்ச பணம் ரூ.17 ஆயிரத்தை கைப்பற்றினர். மொத்தம் ரூ.8 லட்சத்து 27 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சார்பதிவாளர் சங்கீதாவிடம் போலீசார் விசாரித்தபோது, ஆவண எழுத்தர்கள் மற்றும் புரோக்கர்களிடம் இருந்து அவரது உதவியாளர் உதயகுமார் லஞ்ச பணத்தை யு.பி.ஐ. பரிவர்த்தனை, ஜி-பே, போன்-பே, பே-டி.எம். மற்றும் பணமாக பெற்றும், 2, 3 நாட்கள் சேர்த்து வைத்த பணத்தை சார் பதிவாளர் ஆலோசனைபடி, விருத்தாசலம் பெரியார்நகரில் இயங்கி வரும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமாரிடம் கொடுக்க வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுவரை ரூ.42 லட்சம் கொடுத்தது, அவர்களின் பண பரிவர்த்தனையில் தெரிந்தது.

லஞ்ச பணத்தில் 10 வீட்டு மனைகள்

அதாவது யு.பி.ஐ. பரிவர்த்தனை மூலம் ஜி-பே, போன்-பே, பே-டி.எம். மற்றும் வங்கி கணக்கு எண்கள் மூலமாக பரிவர்த்தனை நடந்துள்ளது. இதையடுத்து போன்-பே மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான தொகை குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். லஞ்ச பணத்தில் சார் பதிவாளர் சங்கீதா உளுந்தூர்பேட்டையில் 10 வீட்டு மனைகள் வாங்க பதிவு செய்துள்ளார் என்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இதையடுத்து லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் சங்கீதா, அவரது உதவியாளர் ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெரு விஜயகுமார் மகன் உதயகுமார்(34), விருத்தாசலம் பெரியார்நகர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார் (45), ஆவண எழுத்தர்கள் கந்தசாமி, பாலதண்டாயுதம் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச வழக்கில் சிக்கிய சார்பதிவாளர் சங்கீதா சங்கராபுரம், கள்ளக்குறிச்சியில் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விருத்தாசலத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும், இந்த காலக்கட்டத்தில்தான் அதிகளவு லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியதால் சார் பதிவாளர் சங்கீதாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதில் பல ஆவணங்களின் ஜெராக்ஸ் மட்டுமே உள்ளது. எனவே இது தொடர்பாக 4-ந் தேதி(திங்கட்கிழமை) விசாரணை நடத்த உள்ளதாகவும், அன்றைய தினம் சார்பதிவாளர் சங்கீதா அசல் ஆவணங்களுடன் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story