தொழில் அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி


தொழில் அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 28 Jun 2023 3:34 AM IST (Updated: 28 Jun 2023 4:41 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி வியாபாரத்தில் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் 2 மடங்கு பணம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

காய்கறி வியாபாரத்தில் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் 2 மடங்கு பணம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொழில் அதிபர்

நாகர்கோவில் நேசமணி நகரை சேர்ந்தவர் ஹெர்பர்ட் வர்கீஸ் (வயது 48), தொழில் அதிபர். இவர் நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறேன். எனக்கு மேல ராமன்புதூரை சேர்ந்த ஒரு பெண் மூலமாக கல்குளம் தாலுகா நெய்யூர் காரவிளையை சேர்ந்த பிரேமா தங்கம் (50), அவருடைய கணவர் முருகன், மகன் பிரேம் ஆனந்த் (29) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அப்போது பிரேமா தங்கம் தனது பணக்கார நண்பர்களுடன் சேர்ந்து குழு நடத்தி வருவதாகவும், அந்த குழு மூலமாக காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி லாபம் அடைந்து வருவதாகவும் கூறினார்.

2 மடங்காக கிடைக்கும்

இந்த தொழிலில் என்னையும் முதலீடு செய்யும்படி கூறினர். அவ்வாறு முதலீடு செய்தால் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும், இதன்மூலம் நான் கொடுக்கும் பணம் ஒரு ஆண்டில் 2 மடங்காக திருப்பி கிடைக்கும் என்றும் கூறினர். இந்த ஆசை வார்த்தைகளை நம்பி நான் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல தவணைகளாக ரூ.94 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தேன். இதைத் தொடா்ந்து சில மாதங்கள் வரை லாபம் என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 500 கொடுத்தனர்.

ஆனால் அதன்பிறகு பணம் கொடுக்கவில்லை. எனவே நான் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டேன். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்த பெண் மட்டும் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தார். மீதமுள்ள பணம் ரூ.82 லட்சத்து 5 ஆயிரத்து 500 தரவேண்டியுள்ளது. இதுதொடர்பாக நான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தேன். அப்போது பணத்தை தந்து விடுவதாக எழுதிக் கொடுத்தனர். ஆனால் அதன்பிறகும் பணத்தை கொடுக்கவில்லை.

தற்போது பணத்தை கேட்டால் கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே என்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

3 பேர் மீது வழக்கு

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி பிரேமா தங்கம், பிரேம் ஆனந்த் மற்றும் முருகன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story