வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை


வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் திருமலை முருகன். இவர் கடையம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று இருந்தார். நேற்று காைல இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக திருமலை முருகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்ட பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டு கதவை கடப்பாரையை கொண்டு உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோக்களை உடைத்து ரூ.1.60 லட்சம் மற்றும் 17½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்். கைரேகை பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டா தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சுமார் ½ கிலோமீட்டர் தூரம் வரை ஓடி நெல்லை-தென்காசி சாலையில் நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய மர்மநபர்கள், வீட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் வெவ்வேறு பக்கமாக திருப்பி வைத்து உள்ளனர். மேலும் காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்கையும் எடுத்து சென்று இருப்பது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் மர்மநபர்கள் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story