3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சம் நிவாரண உதவி
காரில் சிக்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சம் நிவாரண உதவி சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
பணகுடி:
பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பைச் சேர்ந்த நாகராஜன் மகள் நித்திஷா (வயது 6), மகன் நித்திஷ் (4), உறவினரான சுதன் மகன் கபிசாந்த் (4) ஆகிய 3 குழந்தைகளும் சம்பவத்தன்று அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடினர். அப்போது காரின் கதவு திடீரென்று மூடிக்கொண்டதால், 3 குழந்தைகளும் வெளியே செல்ல முடியாமல் காருக்குள்ளேயே சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து லெப்பைகுடியிருப்பில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து சபாநாயகர் அப்பாவு ஆறுதல் கூறி, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.9 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுயம்பு, பாஸ்கர், தாசில்தார் யேசுராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.