குமரியில் ரூ.92 லட்சம் மோசடி; போலி டாக்டர் தம்பதி கைது
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, குமரியில் 23 பேரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, குமரியில் 23 பேரிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தம்பதி மீது புகார்
இரணியல் அருகே உள்ள ஆளூர் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவரது மனைவி ஜமுனா (வயது 47) என்பவர் குமரி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது கணவர் 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் வில்லுக்குறி குதிரைபந்தவிளை பகுதியை சோ்ந்த ராம்குமார் (29) மற்றும் அவரது மனைவி நிஷா வருணி (26) ஆகியோர் எனது வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அப்போது எனக்கு அவர்களிடம் பழக்கம் ஏற்பட்டது.
ராம்குமார், ரெயில்வே அதிகாரி என்றும், அவருடைய மனைவி நிஷா வருணி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ரெயில்வேயில் வேலை...
மேலும் தனக்கு ரெயில்வே துறையில் பல முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர் தெரியும் என்றும், அவர்கள் மூலம் ரெயில்வே துறையில் பலரை வேலைக்கு சேர்த்துள்ளதாகவும் ராம்குமார் கூறினார். மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறினார்.
பின்னர் எனது உறவினர் ஒருவருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, என்னிடம் ரூ.4 லட்சம் வாங்கினார். பின்னர் அவர் வேலை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, ரெயில்வேயில் குழுவாக தான் வேலைக்கு எடுப்பதாகவும், எனவே மேலும் சிலரை அழைத்து வரும்படியும் ராம்குமார் என்னிடம் கூறினார். அவ்வாறு அழைத்து வரும் ஒவ்வொருவரிடமும் ரூ.4 லட்சம் பெற்று தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரூ.92 லட்சம் மோசடி
இதனால் உறவினர் உள்பட 23 பேரிடம் இருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.92 லட்சம் வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர் கூறியது போல 23 பேருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இந்தநிலையில் கணவனும், மனைவி இருவரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதன்பிறகு தான் அவர்கள் ஏமாற்றி பணமோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ராம்குமார், அவருக்கு உடைந்தையாக இருந்த மனைவி இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுதர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ராம்குமார், நிஷா வருணி ஆகியோர் மீது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் வைத்து ராம்குமார், நிஷா வருணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதுபோன்ற பலரிடம் மோசடியில் ஈடுபட்ட தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
ராம்குமார் தன்னை ரெயில்வே அதிகாரி என்றும், டாக்டர் என்றும், அவரது மனைவி நிஷா வருணி டாக்டர் எனவும் கூறி பலரிடம் பழகியது தெரிய வந்தது. அந்த வகையில் மருத்துவத்துறை, ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். குமரி மாவட்டம் மட்டும் இன்றி கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இந்த தம்பதி போலி டாக்டராகவும், ரெயில்வே அதிகாரியாகவும் உலா வந்து பண மோசடியில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ராம்குமார், டாக்டர் என கூறி சிறுமி உள்ளிட்ட சிலருக்கு சிகிச்சை அளித்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ரூ.92 லட்சம் மோசடி செய்ததாக போலி டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.