ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
குன்னூர் அருகே ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்பு நிலம்
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி உள்பட 6 தாலுகாக்கள் உள்ளன. இங்கு அரசு நிலங்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து, அரசு நிலங்களை அதிக விலைக்கு விற்க முயற்சித்து வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அரசு நிலங்களை மீட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், அரசு நிலங்களை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இந்தநிலையில் குன்னூர் அருகே உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேன்லி பார்க் பகுதியில் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் ஆக்கிரமித்து உள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து குன்னூர் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை விவசாயம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
அதன் அடிப்படையில் கலெக்டர் அம்ரித் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பேரில் குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட 3 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர். அதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மீட்கப்பட்ட 3 ஏக்கர் நிலத்தை சுற்றி வருவாய்த்துறையினர் வேலி அமைத்து எச்சரிக்கை பலகை வைத்து உள்ளனர்.
அதில், இந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம். அரசின் பயன்பாட்டிற்காக மீள எடுக்கப்பட்ட நிலம் என்பதால், அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தாசில்தார் சிவக்குமார் கூறும்போது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.