மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்: சிவகாசி தாலுகாவில் முதல் கட்டமாக 85 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு
மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகாசி தாலுகாவில் முதல் கட்டமாக 85 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சிவகாசி
மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகாசி தாலுகாவில் முதல் கட்டமாக 85 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உரிமைத்தொகை
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பயனாளிகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சிவகாசி தாலுகாவில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 357 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களின் 84 ஆயிரத்து 659 ரேஷன் கார்டு தாரர்கள் கிராமப்புறங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முதல்கட்டமாக உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் இல்லம்தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்கள் மூலம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சிவகாசி தாலுகாவில் 209 தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை பொதுமக்களிடம் நேரில் வழங்கினர். இந்த பணியினை சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ராஜீவ்காந்தி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் விக்னேஷ்வரன், செல்வராஜ், ராஜேஷ் ஆகியோர் இருந்த னர். தற்போது வழங்கப்பட்டு வரும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதற்கான ஆதாரங்களுடன் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் நேரில் சென்று வழங்க வேண்டும்.
விண்ணப்பம்
இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் ராஜீவ்காந்தி கூறியதாவது, சிவகாசி தாலுகாவில் 108 ரேஷன் கடைகள் கிராமங்களில் உள்ளது. இவர்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங் கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற திங்கட்கிழமை முதல் பெறப்படுகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் 35 ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இப்பணி தொடங்கிய நிலையில் இதற்கான பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது. நகர்ப்புறங்களில் இரண்டாம் கட்டமாக இப்பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தாலுகாவில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று உரிமை தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை வினியோகம் செய்தனர்.