கல்லூரி மாணவிகள் 6,282 பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை


கல்லூரி மாணவிகள் 6,282 பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை
x
தினத்தந்தி 5 Sep 2022 8:15 PM GMT (Updated: 5 Sep 2022 8:16 PM GMT)

சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில், கல்லூரி மாணவிகள் 6,282 பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில், கல்லூரி மாணவிகள் 6,282 பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

புதுமைப்பெண் திட்டம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் காணொலிக்காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு முதல் கட்டமாக, 17 கல்லூரிகளைச் சேர்ந்த 872 மாணவிகளுக்கு 'புதுமைப்பெண்' பெட்டகப்பைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெண் கல்வியை போற்றும் விதமாகவும் 'புதுமைப்பெண்' என்னும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருக்க வேண்டும்.

உதவித்தொகைகள்

அதே போன்று மாணவிகள் 8, 10, 12-ம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். சேலம் மாவட்டத்தில் 6,282 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தகுதியுடைய மாணவிகளுக்கு உதவித்தொகைகள் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) பாலகுருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story