வேலூர் அருகே சென்னையில் இருந்து கடத்திய ரூ.14¾ கோடி சிக்கியது
சென்னையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரூ.14¾ கோடி வேலூர் அருகே சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் 2 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் சின்ன கோவிந்தம்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஒதுக்குப்புறமான இடத்தில் 4 பேர் காரில் இருந்து சந்தேகப்படும் வகையில் கருப்பு நிற பண்டல்களை அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு மாற்றிக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் ஏறி சோதனையிட்டனர். அப்போது லாரியின் கேபின் மேல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட பண்டல்களில் 2,000, 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கேரளாவுக்கு கடத்தல்
உடனடியாக இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் விரைந்து சென்று 4 பேரையும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். லாரியும், காரும், பணக்கட்டுகளுடன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
விசாரணையில் பிடிபட்டவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த நாசர் (வயது 42), சர்புதீன் (37), மதுரை அங்காடிமங்கலத்தை சேர்ந்த வாசிம் அக்ரம் (19), சென்னை பிராட்வே சாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகைதீன்கலி என்பவரது மகன் நிசார் அகமது (33) என்பது தெரியவந்தது. சென்னை பிராட்வே மண்ணடியில் இருந்து கேரளாவுக்கு பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இங்கு லாரியில் மாற்றப்படும் பணக்கட்டுகள் கோவை அருகே குறிப்பிட்ட ஓர் இடத்தில் வைத்து வேறு வாகனத்துக்கு மாற்றி எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர்.
ரூ.14¾ கோடி
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.14 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரம் என்பது தெரியவந்தது. இந்த பணம் யாரிடமிருந்து எடுத்துச்செல்லப்படுகிறது, கேரளாவில் யாருக்கு பணத்தை எடுத்து செல்கிறீர்கள், எதாவது ஒரு இயக்கத்துக்கு கொண்டு செல்கிறீர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் கூறவில்லை. அதைத்தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் சென்னை வருமான வரித்துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு வந்து பிடிபட்ட 4 பேரிடமும் அந்த பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.