84 விவசாயிகளுக்கு ரூ.1.65 கோடி மானியம்
84 விவசாயிகளுக்கு ரூ.1.65 கோடி மானியம்
ஊட்டி
கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை பெருக்கும் வகையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நில மேம்பாட்டு திட்டங்கள், சிறுபாசன திட்டங்கள் வேளாண் கருவிகள் வழங்குதல் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 70 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வசதி ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 84 பேருக்கு ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நிறைவேறும் நிலையில் உள்ளது. முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 65 லட்சம் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்கு ரூ.94½ லட்சம் மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.70¾ லட்சமாகும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 14 பயனாளிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானிய தொகையாக ரூ.8¾ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 221 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை எந்திரம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது என்று வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.