போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.17 லட்சம் அபராதம் வசூல்-போலீசார் நடவடிக்கை
போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.17 லட்சம் அபராதம் வசூலித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்தை தடுக்கும் வகையிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் கலெக்டர் அலுவலகம், 5 ரோடு உள்பட 4 இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 17 ஆயிரம் பேரிடம் ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி கூறும் போது, 'மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதை கண்காணிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் உள்பட 4 இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை சாமியானா பந்தலில் அமரவைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.