கத்திமுனையில் லாரி டிரைவரிடம் ரூ.17 ஆயிரம் கொள்ளை
கத்திமுனையில் லாரி டிரைவரிடம் ரூ.17 ஆயிரம் கொள்ளை
முத்தூர்
முத்தூர் அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் 4 ேபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி டிரைவர்
நாமக்கல் மாவட்டம் தத்தாதிரிபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 32). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை பல்லடம் - உடுமலை சாலையில் உள்ள தனியார் கோழி தீவன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து லாரியில் கோழி தீவனத்தை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தார். இவர் ஓட்டி வந்த லாரி முத்தூர் - காங்கயம் சாலை செட்டியார்பாளையம் பகுதியில் நள்ளிரவு 11.45 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்ற 2 பேர் லிப்ட் கேட்பது போல் குறுக்கே கை காட்டினார்கள்.
இதனால் லாரி டிரைவர் கவுதம் லாரியை சாலையோரத்தில் நிறுத்தினார். அப்போது கைகாட்டிய 2 பேருடன், இருட்டில் மறைந்திருந்த மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் லாரியின் கேபினில் ஏறி உள்ளே சென்றனர். பின்னர் லாரி டிரைவர் கவுதமிடம் அந்த ஆசாமிகள் 4 பேரும் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். பின்னர் லாரி டிரைவர் கவுதம் வைத்திருந்த ரூ.17 ஆயிரத்து 500-ஐ பறித்துக்ெகாண்டு தப்பி சென்றனர். அப்போதுதான் அந்த ஆசாமிகள் லிப்ட் கேட்கவில்லை என்றும், லிப்ட் கேட்பது போல் நடித்து கொள்ளையடிக்க வந்தவர்கள் என தெரியவந்தது.
போலீஸ் வலைவீச்சு
இது பற்றி லாரி டிரைவர் கவுதம் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிப்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
----