4 மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் உதவி
தேவூர்:-
கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான கல்லூரி மாணவர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான நிவாரண உதவியை உதவி கலெக்டர் வழங்கினார்.
4 மாணவர்கள் பலி
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆனைப்பள்ளத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 21). இவர் எடப்பாடி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் ஆகும். இதனால் சரவணன் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் 10 பேருடன் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு பிறந்த நாளை கொண்டாடசென்றார்.
காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த அவர்களில் இடங்கணசாலையை சேர்ந்த மணிகண்டன் (20), எருமைப்பட்டியை சேர்ந்த முத்துசாமி (20), எட்டிக்குட்டைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (20), கன்னந்தேரியை சேர்ந்த மணிகண்டன் (20) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். அவர்களது உடல்களை தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் மற்றும் போலீசார் மீட்டனர். தொடர்ந்து 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடும்பத்தினருக்கு நிவாரணம்
இதையடுத்து நேற்று 4 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று சங்ககிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) தணிகாசலம் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினார். அதனை குடும்பத்தினர் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர். அப்போது தாசில்தார்கள் பானுமதி (சங்ககிரி), லெனின் (எடப்பாடி) மற்றும் வருவாய்த்துறையினர், தி.மு.க. பிரமுகர்கள் உடன் இருந்தனர்.