பயனாளிகளுக்கு ரூ.20¼ கோடி தொழில் கடன்; கனிமொழி எம்.பி. வழங்கினார்
தூத்துக்குடியில் பயனாளிகளுக்கு ரூ.20¼ கோடி தொழில் கடனை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 584 பேருக்கு ரூ.20 கோடியே 41 லட்சம் மதிப்பிலான சிறு குறு நடுத்தர தொழில் கடன்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிறு தொழில்கள் வளர வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சிதான் இந்த கடன் வழங்கும் முகாம். இதில் பல்வேறு வங்கிகள் பங்கேற்று உள்ளனர். இந்த முகாமில் சிறு, குறு நிறுவனங்கள் கடன் பெற்றுக்கொள்ள தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்தும், அந்த ஆவணங்கள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் கடன் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் இருந்தாலும், சிறு தொழில்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கி பிடிக்கும் சக்தியாக இருக்கிறது. இந்த தொழில்கள் சாமானிய மக்கள் தங்களின் கனவுகளை அடைவதற்கு முதல் படியாக விளங்குகிறது. இதிலிருந்து அவர்கள் பெரிய தொழில் முனைவோராக மாற முடியும். பண மதிப்பிழப்பு, கொரோனா போன்ற காரணங்களால் சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்து உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள்வதற்கு, இந்த கடன் வழங்கும் திட்டமானது புதிய ரத்தம் பாச்சுவது போன்று விளங்குகிறது.
கோவில்பட்டி பார்வை குறைபாடுள்ளோர் குறுந்தொழில் குழுமத்திற்கு தொழிற்கூடம் அமைப்பதற்கு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்பட்ட ரூ.34.67 லட்சம் உள்பட மொத்தம் 584 பேருக்கு ரூ.20.41 கோடிக்கான கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிறு, குறு தொழில் நிறுவனம் தொடங்குவோருக்கு தன்னம்பிக்கை ஏற்படும். மேலும் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குபவர்களாக திகழ்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் கூடுதல் கலெக்டர் சுபம் தாக்கரே, உதவி கலெக்டர் கவுரவ்குமார், மதர் சமூகசேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, மாவட்ட தொழில் மையத்தின் மாவட்ட வள அலுவலர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.