அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.20 ஆயிரம்-பொருட்கள் திருட்டு


அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.20 ஆயிரம்-பொருட்கள் திருட்டு
x

அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.20 ஆயிரம்-பொருட்கள் திருட்டுபோனது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்த ஒக்கரை அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கல்பனா. இவர் செங்காட்டுப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் ரியாஸ், மகள் சஹானா ஆகியோரின் படிப்பிற்காக, அவர்கள் ஒக்கரையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் துறையூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ஒக்கரையில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணனும், கல்பனாவும் ஒக்கரைக்கு விரைந்து சென்றனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள், பொருட்கள் அலங்கோலமாக கிடந்தன. இது பற்றி அவர்கள் உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போலீசாருடன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார். முதல்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோ மற்றும் லாக்கரை உடைத்து பீரோவில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம், வெள்ளித்தட்டு, கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story