ரூ.25 லட்சம் குடிநீர் குழாய்கள் திருட்டு


ரூ.25 லட்சம் குடிநீர் குழாய்கள் திருட்டு
x
தினத்தந்தி 27 Jun 2023 12:31 AM IST (Updated: 27 Jun 2023 2:08 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்களை திருடிய என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்களை திருடிய என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.25 லட்சம் குடிநீர் குழாய்கள் திருட்டு

திருச்சி மாநகராட்சி பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தில்லைநகர் பகுதியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக தில்லைநகர் 10-வது குறுக்குவீதியில் குழாய்களை இருப்பு வைத்திருந்தனர்.

இந்தநிலையில் அவற்றில் 164 குடிநீர் குழாய் மற்றும் அவற்றை பொருத்த பயன்படும் 180 கியாஸ்கட் ஆகியவை திருட்டு போனது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதுபற்றி அறிந்த அந்த நிறுவன மேலாளரான சென்னை மணலி அன்பழகன் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

2 பேர் கைது

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னவள்ளி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றிய சென்னை மணலி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (54), என்ஜினீயராக பணியாற்றி வந்த திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த கண்ணன் (29) ஆகியோர் சேர்ந்து குடிநீர் குழாய்களை திருடி விற்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன், கண்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 40 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் 2 பேரும் திருச்சி 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு விஜயா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story