சிதம்பரத்தில் பட்டப்பகலில் துணிகரம்வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க வந்த விவசாயியிடம் ரூ.3 லட்சம் அபேஸ்மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சிதம்பரத்தில் பட்டப்பகலில் துணிகரம்வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க வந்த விவசாயியிடம் ரூ.3 லட்சம் அபேஸ்மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க வந்த விவசாயியிடம் ரூ.3 லட்சத்தை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்


சிதம்பரம்,

விவசாயி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்டியாமேடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அறிவுக்கண்ணன் (வயது 43). விவசாயி. இவர் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனக்கு சொந்தமான நகைகளை அடகு வைத்திருந்தார்.

இந்த நகைகளை மீட்பதற்காக அறிவுக்கண்ணன் ரூ.3 லட்சம் ரொக்கத்துடன் நேற்று காலை தனது மனைவி லதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சிதம்பரம் வங்கிக்கு வந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய லதா உடனே வங்கிக்குள் சென்றார்.

கவனத்தை திசை திருப்பி..

அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வங்கி முன்பு வந்த மர்மநபர்கள் 2 பேர் சாலையில் 5 ரூபாய் நாணயங்களை வீசியதுடன், அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த அறிவுக்கண்ணனிடம் உங்களது நாணயங்கள் கீழே கிடப்பதாக கூறி, அவருடைய கவனத்தை திசை திருப்பியுள்ளனர். இதனையறியாத அறிவுக்கண்ணன் கீழே கிடந்த சில்லரை நாணயங்களை எடுக்க முயன்றார். அந்த சமயத்தில் மர்மநபர்கள் 2 பேரும் அறிவுக்கண்ணனின் மோட்டர் சைக்கிள் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அறிவுக்கண்ணன் இதுபற்றி சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறிவுக்கண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அறிவுக்கண்ணன் தனது மனைவியுடன் நகை மீட்க பணத்துடன் வங்கிக்கு வருவதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவர்களை பின் தொடர்ந்து வந்து, அறிவுக்கண்ணனின் கவனத்தை திசை திருப்பி பணத்தை அபேஸ் செய்து சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டதுடன், மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் வங்கி முன்பு நின்ற விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்ற சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story