ரூ.3 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி செயலாளர் கைது
சாயல்குடி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி செயலாளர் கைது
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கொக்காடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் தனது கிராமத்தில் புதிய கடை அமைக்க அனுமதி கோரி அவத்தாண்டை ஊராட்சி செயலாளர் அய்யம்பெருமாளை(வயது 44) கடந்த சில நாட்களுக்கு முன் அணுகினார். அப்போது ரூ.3 ஆயிரம் கொடுத்தால் புதிதாக கடை ெதாடங்க அனுமதி ரசீது தருவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனியசாமி, இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அய்யம்பெருமாளிடம் முனியசாமி நேற்று மாலை கொடுத்தார். அப்போது மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் மற்றும் போலீசார் அய்யம்பெருமாளை கையும், களவுமான பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அய்யம்பெருமாளிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.