ரூ.40 லட்சம் போதைப்பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல்


ரூ.40 லட்சம் போதைப்பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல்
x

பள்ளிகொண்டா அருகே, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

பள்ளிகொண்டா அருகே, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியாக நின்ற லாரி

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலூர் மார்க்கமாக தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்காக வேலலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கொண்டாவை அடுத்த அகரம்சேரி பள்ளிகுப்பம் சாலையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.

அந்த லாரியை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் நின்றிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு சென்ற கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் சென்றனர். அவர்கள் லாரியில் என்ன‌உள்ளது, எதற்காக நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று அங்கு நின்றவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு லாரியை சுற்றி நின்றிருந்த வாலிபர்கள், அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

5 டன் போதைப்பொருட்கள்

உடனடியாக அவர்கள் இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ராஜகுமாரி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், போலீஸ்காரர்கள் பிரேம்அனந்த், கோபி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

போலீசார் வருவதை கண்டதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் காரில் தப்பி சென்றுவிட்டனர். லாரி ஓரமாக நின்றிருந்த இரண்டு வாலிபர்களை மட்டும் போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களுடன் லாரியை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்தனர். லாரி முழுவதும் 160 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் 5 டன் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பாக்கெட்டுகளாக, பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ரூ.40 லட்சம்

அவர்கள் ஓசூர் கலைஞநகர் முருகன் என்பவரது மகன் விவேகானந்தன் (வயது 36), பெங்களூரு பொம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் அரவிந்த் (26) என்பது தெரிய வந்தது. மேலும் அத்திப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் வேலூர் வரை காரில் போகலாம் எனக் கூறி அழைத்து வந்ததாகவும், குட்கா, ஹான்ஸ் சம்பந்தமாக எந்த விவரமும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இருவரிடமும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் கூறுகையில் கன்டெய்னர் லாரி டிரைவரும், காரில் வந்தவர்களும் தப்பி சென்று விட்டனர். இந்த போதைப் பொருட்களை எங்கு கடத்தி செல்கிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கலாம் என்றனர்.


Next Story