கார் விற்பனை நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கார் விற்பனை நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்,
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கார் விற்பனை நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கார் விற்பனை நிலையம்
நாகர்கோவில் பறக்கை பகுதியை சேர்ந்தவர் ரஜீலால் பிரைட். இவர் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ரூ.13 லட்சத்திற்கு கார் வாங்கியுள்ளார். இந்த காரில் திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற போது நான்கு வழிச்சாலையில் வைத்து விபத்துக்குள்ளாகி கார் முழுமையாக சேதமடைந்தது.
விபத்தில் காரை ஓட்டிய ரஜீலால் பிரைட் மற்றும் அவரது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கார் விபத்துக்குள்ளான போது காரில் இருந்த ஆறு ஏர்பேக்குகளும் செயல்படவில்லை.
ரூ.5 லட்சம் நஷ்டஈடு
விபத்துக்குள்ளாகியும் காரின் ஏர்பேக் செயல்படாதது சேவைக்குறைபாடாகும் எனக் கூறி வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட கார் விற்பனை நிறுவனத்திற்கு ரஜீலால் பிரைட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ரஜீலால் பிரைட் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கார் விற்பனை செய்யும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட ரஜீலால் பிரைடுக்கு வழங்க வேண்டும்.
மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரத்தையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.