குறுவை நெல்லுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக குவிண்டாலுக்கு ரூ.500 வழங்க வேண்டும்
மகசூல் இழப்பை ஈடு செய்ய குறுவை நெல்லுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக குவிண்டாலுக்கு தமிழக அரசு ரூ.500 வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அய்யம்பேட்டை:
மகசூல் இழப்பை ஈடு செய்ய குறுவை நெல்லுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக குவிண்டாலுக்கு தமிழக அரசு ரூ.500 வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் நீர்மட்டம் குறைந்தது
குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆனால் தண்ணீர் திறப்பின் போது 105 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுப்பதாலும் தொடர்ந்து சரிந்தது. இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர்.
விவசாயிகள் வேதனை
ஏற்கனவே உரம், டீசல், பூச்சி மருந்து, களைக் கொல்லி ஆகியவற்றின் விலைகள் பல மடங்கு உயர்ந்து விட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறையும் விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.
இதனால் தற்போது குறுவை சாகுபடியில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மகசூல் இழப்பை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.500 சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு ஊக்கத்தொகை
இதுகுறித்து கணபதி அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் மற்றும் விவசாயிகள் கூறுகையில், தமிழக அரசு நடப்பாண்டு (2023- 2024) கொள்முதல் பருவத்திற்கு சாதாரண ரக நெல்லுக்கு ரூ.82-ம், சன்னரக நெல்லுக்கு ரூ.107-ம் ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனை அரசு கருத்தில் கொண்டு குறுவை நெல்லுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும். இது மகசூல் இழப்பை ஈடு செய்ய உதவும். இத்தொகையை தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வருகிற சம்பா, தாளடி பயிர்களுக்கு முழு காப்பீட்டு தொகையையும் அரசே செலுத்த வேண்டும் என்றனர்.