1,022 சுய உதவி குழுவினருக்கு ரூ.67 கோடி கடன் உதவி


1,022 சுய உதவி குழுவினருக்கு ரூ.67 கோடி கடன் உதவி
x

நெல்லை மாவட்டத்தில் 1,022 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.67 கோடி கடன் உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 1,022 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.66 கோடியே 93 லட்சம் வங்கி கடன் உதவிக்கான காசோலைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (ஸ்டாட் -அப்) என்ற திட்டத்தின் கீழ் 13 மகளிர் சுய உதவி குழுவினர் முருங்கை இலை பொடி, தென்னை ஓலையில் இருந்து உறிஞ்சு குழாய் (ஸ்ட்ரா) உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறார்கள். அவர்களை புத்தொழில் நிறுவனங்களாக அறிவித்து அதற்கான பதிவு சான்றுகளையும், விற்பனை சின்னங்களையும் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், யூனியன் தலைவர்கள் பாளையங்கோட்டை கே.எஸ்.தங்கபாண்டியன், மானூர் ஸ்ரீலேகா அன்பழகன், பாப்பாக்குடி பூங்கோதை, சேரன்மாதேவி பூங்கோதை, மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story