ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் குவிந்த விதவிதமான பறவைகள்
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் விதவிதமான பறவைகள் குவிந்தன..
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் விதவிதமான பறவைகள் குவிந்தன..
பெரிய கண்மாய்
ராமநாதபுரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி உள்ளது. அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான கண்மாய்கள் அமைந்திருந்தாலும் ஆர்.எஸ் மங்கலத்தில் உள்ள பெரிய கண்மாய் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்படும் இந்த தண்ணீரை நம்பி ராமநாதபுரம், சிவகங்கை என 2 மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட வைகை தண்ணீரானது ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய்க்கு வந்த நிலையில் தற்போது வரை ஓரளவு தண்ணீர் இருப்புடன் பெரிய கண்மாய் காட்சி அளித்து வருகின்றது.
வறண்டு கிடக்கின்றன
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் காஞ்சிரங்குளம், சித்திரங்குடி மற்றும் நயினார்கோவில் அருகே தேர்த்தங்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.
இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் பருவமழை சீசன் தொடங்கி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வர தொடங்கும்.
இவ்வாறு வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து மீண்டும் குஞ்சுகளுடன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரும்பி செல்லும். கடந்த ஆண்டு பருவமழை சீசனில் மழையே இல்லாததால் இந்த பறவைகள் சரணாலயங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காட்சியளிக்கின்றன .இதனால் பறவைகள் ஏதும் வராமல் சரணாலயம் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றது.
பறவைகள் குவிந்தன
இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு இந்த ஆண்டு ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து குவிந்தன. குறிப்பாக மஞ்சள் மூக்கு நாரை, நத்தை கொத்தி நாரை, கூலைக்கடா உள்ளிட்ட பறவைகள் பெரிய கண்மாயில் தண்ணீருக்குள் வளர்ந்து நிற்கும் மரக்கிளைகளில் கூடுக்கட்டி முட்டையிட்டு குஞ்சுகளுடன் வாழ்ந்து வருகின்றன.
இதை தவிர பாம்பு தாரா, பெரிய நீர்க்காகம், கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், நாம கோழிகள் உள்ளிட்ட விதவிதமான பறவைகள் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் இரை தேடுவதற்காக குவிந்துள்ளன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளதை ஏராளமான விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அதுபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மங்கலம் கண்மாயிலும் இந்த ஆண்டு அதிகமான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.