ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீச்சு-மதுரையில் பரபரப்பு
மதுரையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு, 2 பேர் தப்பிச்சென்றனர்
மதுரையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு, 2 பேர் தப்பிச்சென்றனர்.
பெட்ரோல் குண்டுகள் வீச்சு
மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 54). ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவர். தற்போது அந்த அமைப்பின் பகுதி செயலாளராக உள்ளார். சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது அலுவலகம் மற்றும் கார் நிறுத்துமிடம் வீட்டின் ஒரு பகுதியில் உள்ளது., அருகே உள்ள மற்றொரு பகுதியில் அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அதில் ஒருவர், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களில் தீயை பற்ற வைத்து கிருஷ்ணனின் அலுவலகம் மற்றும் கார் நிறுத்துமிடத்தில் வீசினார். பின்னர் இருவரும் தப்பிவிட்டனர்.
இந்த சத்தத்தை கேட்டு ஓடிவந்த காவலாளி, அங்கு பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். மேலும் தகவல் அறிந்து போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசபெருமாள், ஜெய்ஹிந்த்புரம் உதவி கமிஷனர் சண்முகம், கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
மர்மநபர் 3 பெட்ரோல் குண்டுகள் வீசியதில், 2 குண்டுகள் வெடித்து சிதறியுள்ளன. ஒன்று வெடிக்கவில்லை. இந்த சம்பவத்தில் அங்கிருந்த வேனில் மட்டும் லேசாக தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. அந்த வீட்டின் எதிரே உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் ஏற்கனவே மதுரை வந்த போது கிருஷ்ணன் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது இருந்து கிருஷ்ணனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சம்பவம் பற்றி அறிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அங்கு குவிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் பா.ஜனதா, இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், மதுரையில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.