ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 2-ந்தேதி தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி கேட்டு போலீசில் கொடுக்கப்பட்ட மனு பரிசீலிக்கப்படாததால், ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 50 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பல்வேறு நிபந்தனைகளுடன் நவம்பர் 6-ந்தேதி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆனால், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கோவை, பல்லடம் உள்பட 6 இடங்களில் அனுமதி வழங்க முடியாது. கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஊர்வலம் செல்லலாம். மற்ற இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்திக்கொள்ளலாம் என்று போலீசார் உத்தரவிட்டனர்.
மேல்முறையீடு
இதுதொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், உளவுத்துறை அறிக்கையின்படி, போலீசாரின் உத்தரவை ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சுப்பிரமணியன் உள்பட பலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜே.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா, வக்கீல் ரபு மனோகர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
ஊர்வலம்
அவர்கள் தங்களது வாதத்தில், 'முதலில் நிபந்தனைகளுடன் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு. அவரது உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். அக்டோபர் 2-ந்தேதி மற்றும் அதன்பிறகு பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். கிட்டத்தட்ட 500 போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை. தற்போது ஜனவரி 22-ந்தேதி மற்றும் 29-ந்தேதி அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க உள்ளோம். இதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். வேறு தேதியில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினாலும், அதை ஏற்க தயாராக உள்ளோம்'' என்று கூறினர்.
உகந்தது அல்ல
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ்திலக், ''இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை, கோவை வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக 6 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. மீதமுள்ள 44 இடங்களில் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில், கடலூர் உள்ளிட்ட 3 இடங்களில் ஊர்வலம் சென்ற மனுதாரர்கள், மற்ற இடங்களில் ஊர்வலத்தை ரத்துசெய்து விட்டனர். போலீசார் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியும், மனுதாரர்கள்தான் ஊர்வலம் செல்லவில்லை. அதனால், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.'' என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.