ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகா, உத்தரபிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுக்கோட்டை:
வெடிகுண்டு மிரட்டல்
உத்தரபிரதேச மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு வாட்ஸ்-அப் எண்ணில் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அந்த மர்மநபர் ஒரு வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதில் சில செல்போன் எண்களை இணைத்துள்ளார். அந்த எண்களில் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குரியதாகும்.
அந்த குழுவில் தான் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை பதிவு செய்துள்ளார். அதாவது உத்தரபிரதேசம், கர்நாடக மாநில ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் உள்பட 6 இடங்களில் இரவு 8 மணிக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என கடந்த 4-ந் தேதி ஒரு பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த உத்தரபிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தினர் இதுகுறித்து லக்னோ போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புதுக்கோட்டை வாலிபர் கைது
வாட்ஸ்-அப்பில் பதிவிடப்பட்ட செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில் அந்த செல்போன் எண் தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த ராஜ் முகமது (வயது 20) என்பவருக்குரியது என தெரியவந்தது. இதையடுத்து லக்னோவில் இருந்து போலீசார் நேற்று புதுக்கோட்டை வந்தனர்.
திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உதவியுடன் திருக்கோகர்ணத்தில் வைத்து ராஜ் முகமதுவை லக்னோ போலீசார் கைது செய்தனர். மேலும் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரித்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் லக்னோ அழைத்து செல்ல அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.