ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும்: போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி அதுதொடர்பான உத்தரவை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி ஆகியவை முன்னிட்டு அக்டோபர் 2-ந்தேதி 50 இடங்களில் அணிவகுப்பு மரியாதை நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மனு கொடுத்தனர். இந்த மனுவை போலீசார் பரிசீலிக்காததால், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட்டும், இந்த வழக்குகளை விசாரித்து, நிபந்தனைகளுடன் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டது.
ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்தது மற்றும் அதனால் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, இந்த அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.
ஊர்வலத்துக்கு அனுமதி
இதையடுத்து ஏற்கனவே வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 50 பேரும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டில் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவம்பர் 6-ந்தேதி அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு போலீஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, "அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்" என்று கூறினார்.
சுற்றறிக்கை தாக்கல்
அந்த சுற்றறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், "ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், ஐகோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளுடன், மாநகர, மாவட்டங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு, ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
மனுதாரர்கள் 50 பேர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் எஸ்.பிரபாகரன், ஜி.ராஜகோபால், என்.எல்.ராஜா, வக்கீல் ரபு மனோகர் ஆகியோர், "ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை நிறைவேற்றாமல், சுற்றறிக்கையை டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
விடுதலை சிறுத்தைகள்
மேலும், "தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 500 இடங்களில் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அப்போது, தமிழ்நாட்டில் எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். மட்டும் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாட வேண்டியதுள்ளது" என்றும் வக்கீல்கள் கூறினர்.
இதையடுத்து நீதிபதி, "அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி அதுதொடர்பான உத்தரவுகளை நாளை (புதன்கிழமை) போலீஸ் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.