ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்-பொதுக்கூட்டம்


ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்-பொதுக்கூட்டம்
x

கும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவா சங்கம் சார்பில் சத்ரபதி வீரசிவாஜியின் 350-வது முழு சூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்த நாள் விழா, திருவருட்பிரகாச வள்ளலார் 200-வது ஜெயந்தி விழா ஆகியவற்றை முன்னிட்டு நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ரோட்டரி முன்னாள் கவர்னர் ஏ.கே.எஸ். பாலாஜி தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் கும்பகோணம் கடலங்குடி தெருவில் இருந்து தொடங்கி தஞ்சை மெயின் ரோடு, பெரிய கடை தெரு, பெரிய தெரு, காந்தி பார்க், வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் மார்னிங் ஸ்டார் ஸ்கூல் பகுதிக்கு வந்தடைந்தது.

பொதுக்கூட்டம்

ஊர்வலத்தில் தஞ்சாவூர் கோட்ட இணை தலைவர் கண்ணன், மதிவாணன், சீனிவாசன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்புமுருகானந்தம், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சதீஷ்குமார், மாநகர தலைவர்கள் பொன்ராஜ், வாசன் வெங்கட்ராமன் மற்றும் நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தஞ்சை கோட்ட இணைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். தஞ்சை மண்டல நாடார்கள் கூட்டமைப்பின் நகர செயலாளர் எஸ்.முனியசேகர் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மண்டல அமைப்பாளர் முத்துக்குமார் பேசினார்.

போலீஸ் பாதுகாப்பு

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜ்மோகன், பூரணி, ஜெகபர் சித்திக், ஆகியோரின் தலைமையின் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊர்வலத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட கட்டிட மாடிகளில் அமர்ந்தபடி நவீன கருவிகளைக் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடங்களை போலீசார் கண்காணித்தனர். ஊர்வலம் பாதைகளில் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் நேற்று மாலை கும்பகோணம் நகரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story