போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
ஊட்டி, கூடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.
ஊட்டி,
ஊட்டி, கூடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது. ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் தொடங்கிய ஊர்வலம் மார்க்கெட், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், எட்டின்ஸ் சாலை வழியாக சென்று மீண்டும் ஏ.டி.சி. பகுதியில் முடிந்தது.
இந்த ஊர்வலத்துக்கு அவினாசி ஆதினம் கிரி காமாட்சி தாசர் தலைமை தாங்கினார். தெற்கு தமிழ்நாடு பொறுப்பாளர் கிரீஸ், முன்னாள் நாக்குபெட்டா தலைவர் அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
கோத்தகிரி தாலுகா தலைவர் ராஜேஷ் சந்தர், ஊட்டி நகர தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. ஊர்வலத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையில் துணை சூப்பிரண்டுகள் யசோதா, கோவிந்தராஜன் மேற்பார்வையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூடலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு இருந்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். சேரங்கோடு சாமியார் மலை சுவாமி ஓம்காரனந்தா, நம்பாலக்கோட்டை சிவன்மலை நிர்வாக குழு தலைவர் கேசவன், செயலாளர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் நகராட்சி அலுவலகம், ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக ஐந்து முனை சந்திப்பு பகுதியை அடைந்தது. இதில் கோவை கோட்ட பொறுப்பாளர் சுரேஷ்பாபு, ரவீந்திரன், சந்திரசேகர், சுரேஷ் உள்பட ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். கொடியேற்றப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.