குமரியில் ரப்பர் விலை சரிவு


குமரியில் ரப்பர் விலை சரிவு
x

குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

ரப்பர் விவசாயம்

குமரி மாவட்டத்தில் முக்கிய பணப்பயிராக ரப்பர் உள்ளது. ரப்பர் விவசாயத்தை நம்பி ஏராளமான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உள்ளனர். ரப்பரின் விலை உள்நாட்டு தேவையின் அடிப்படையில் கேரள மாநிலம் கோட்டயம் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ரப்பரின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் கிலோவிற்கு ரூ.20 வரை குறைந்துள்ளது.

கடந்த மாதம் கிலோ சராசரியாக ரூ.165-க்கு விற்பனையான ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பர் நேற்று கிலோ ரூ.145 ஆக குறைந்தது.

விவசாயிகள் கவலை

இதுபோல் நேற்றைய நிலவரப்படி கோட்டயம் சந்தையில் வியாபாரிகள் விலையாக ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.140 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.129.50 ஆகவும் இருந்தது.

தற்போது கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் ரப்பர் பால் உற்பத்தி குறைந்து வருகிறது. அதேநேரத்தில் பால்வடிப்பு கூலி, மரங்கள் பராமரிப்பு செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் ரப்பர் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.


Next Story