ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்:தலைவர்கள் சிலைகள் மறைப்பு; சுவர் விளம்பரங்கள் அழிப்பு


ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்:தலைவர்கள் சிலைகள் மறைப்பு; சுவர் விளம்பரங்கள் அழிப்பு
x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டு, அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டு, அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித்தலைவர்களின் புகைப்படங்கள், விளம்பர பலகைகள் போன்றவை அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

புகைப்படம் அகற்றம்

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த மாநகராட்சி அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயர் பலகை துணியால் மூடப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் இருந்த பல்வேறு கல்வெட்டுகள் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டு உள்ளது. அலுவலக வளாகம், கூட்ட அரங்கம் போன்றவற்றில் இருந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும் அரசின் திட்ட விழிப்புணர்வு பேனர்கள், டெண்டர்கள் உள்ளிட்ட விளம்பர நோட்டீஸ்கள் அகற்றப்பட்டன.

துணியால் மறைப்பு

தொகுதியில் உள்ள முக்கிய இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் வரையப்பட்டு இருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள், பேனர்களும் அகற்றப்பட்டன.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள உள்ள காமராஜர், ஈ.வி.கே. சம்பத் ஆகியோரின் சிலைகளும் துணியால் மூடி மறைக்கப்பட்டு உள்ளன.


Next Story