கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்


கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்
x

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்த விதிகளை உருவாக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றிய தங்கலட்சுமி கொரோனா சிகிச்சை பணியில் முன்கள பணியாளராக வேலை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 2020-ம் அவர் மரணம் அடைந்தார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் தொற்று பாதித்து உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் அப்போது அறிவித்தார்.

விதிகள் இல்லை

அதன் அடிப்படையில் தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் கொடுத்த மனுவை தமிழ்நாடு அரசு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அருணாச்சலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் வகையில் விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதால், அரசு பணியை பெற தகுதி இல்லை' என்று விளக்கம் அளித்தார்.

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உருவாக்க வேண்டும்

கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடும், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலையும் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். அதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிசன் பெஞ்ச் கடந்த மே 11-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அரசு எந்த விதிகளையும் இதுவரை வகுக்கவில்லை. எனவே, உரிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற ஆகஸ்டு 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story