'லெஸ்பியன்' மோகத்தால் வீட்டை விட்டு ஓட்டம்: 3 குழந்தைகளின் தாயுடன், இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி?
‘லெஸ்பியன்’ மோகத்தால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 3 குழந்தைகளின் தாயுடன், இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொண்டலாம்பட்டி:
திருமணமான இளம்பெண்
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் திடீரென மாயமானார். அப்போது அவர், ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, அந்த கடிதத்தின் மீது கணவர் கட்டிய தாலியையும் கழற்றி வைத்து இருந்தார்.
இந்த கடிதத்தை படித்து பார்த்த அவருடைய கணவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில், தனக்கு உங்களுடன் (கணவருடன்) வாழ விருப்பம் இல்லை எனவும், 39 வயது பெண் ஒருவருடன் செல்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. அப்போதுதான், தன்னுடைய மனைவிக்கு இன்னொரு பெண்ணுடன் 'லெஸ்பியன்' உறவு இருந்தது தெரிய வந்தது.
போலீசில் புகார்
இருந்தாலும் அந்த பெண்ணின் கணவர், கொண்டலாம்பட்டி போலீசில், தன்னுடைய மனைவி மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் மனு கொடுத்து இருந்தார்.
இதற்கிடையே அதே போலீஸ் நிலையத்தில் 3 குழந்தைகளின் தாய் ஒருவர், தன்னுடைய குழந்தைகளையும், கணவரையும் தவிக்க விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த 2 புகார்களின் பேரிலும் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு தகவல்கள்
போலீசாரின் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அது குறித்து போலீசார் கூறியதாவது:-
கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் 3 குழந்தைகளின் தாயும், அந்த இளம்பெண்ணும் வேலை பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டனர். எப்போதும் இருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். அதற்கு திருமண வாழ்க்கை தடையாக இருந்துள்ளது.
எனவே வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வாழ முடிவு செய்தனர். அதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதேபோல் இரு தரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பெண்கள் இருவரும் திருப்பூரில் தங்கி இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று 2 பெண்களையும் மீட்டு கொண்டலாம்பட்டி அழைத்து வந்தனர். அப்போது இருவருக்கும் அறிவுரை கூறி அவர்களது குடும்பத்துடன் அனுப்பி வைத்தனர்.
மீண்டும் ஓட்டம்
அப்படி இருந்தும் அவர்களால் பிரிந்து வாழ முடியவில்லை. கடந்த 7 மாதங்களாக தங்களது 'லெஸ்பியன்' இணையை பார்க்காமல், பேசாமல் இருவராலும் இருக்க முடியவில்லை. எனவே தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மீண்டும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் தங்களது குடும்பத்தினரை விட்டு விட்டு வெளியேறி விட்டனர்.
'லெஸ்பியன்' உறவால் 3 குழந்தைகளின் தாய் குடும்ப வாழ்க்கையை தொலைத்து கொண்டதுடன், கணவரையும், குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்று விட்டார் என்று போலீசார் வேதனையுடன் கூறினர்.
செல்போன் எண்கள் கண்காணிப்பு
இந்த சம்பவம் கொண்டலாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே 'லெஸ்பியன்' ஜோடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதாவது, அந்த 2 பெண்களும் யாரிடமாவது செல்போனில் பேசுகிறார்களா அல்லது தங்களது பெற்றோர், தோழிகளிடம் தொடர்பில் உள்ளனரா என்பதற்காக அவர்களது செல்போன் எண்களை கொண்டு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.